தல வரலாறு - ஸ்ரீ பெரிய நாச்சியம்மன் திருக்கோவில், தென்னூர், திருச்சி

ஸ்ரீ பெரியநாச்சி அம்மன் துணை

ஸ்ரீ பெரியநாச்சி அம்மன் தல வரலாறு

தகவல் : ஏழுமலை, திருச்சி(கண்ணூர்பட்டி பருத்திக்குடையான்   கோத்திரம்)

பலநூறு ஆண்டுகளுக்கு(சுமார் 300 வருடங்களுக்கு முன் 1690-1710) முன்பு
ஸ்ரீ் பெரியநாச்சி அம்மனின் கணவர் ஸ்ரீ வீரிய பெருமாள் உறையூர் பகுதியில் வசித்து திருச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் சென்று எண்ணெய் வாணிகம் செய்து வந்தார். 

அச்சமயம் உறையூரை மன்னர் திரு. விசுவப்ப நாயக்கர்(மதுரை இராணி மங்கம்மாள் சகோதரர்) மந்திரி திரு. அரிய நாத முதலியாருடன் சேர்ந்து சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். அப்போது மன்னரது மகள் இறந்து விட்டதையடுத்து, மகளை இழந்த விரக்தியில், மன்னரால் சரியாக ஆட்சியில் கவனம் செலுத்த முடிய வில்லை. ஓரு சமயம், உறையூர் கடைவீதி வழியாக மன்னர் வந்தபோது, அவரது மகளைப் போலுள்ள நமது பெரியநாச்சியை பார்த்தார், உடனிருந்த மந்திரி விசுவப்ப நாயக்கரிடம் தகவல் தெரிவித்து பெரியநாச்சியை அழைத்து வரச் சொன்னார். பெரியநாச்சி தனது கணவருடன் சென்று மன்னரை சந்தித்தார். அது சமயம், மன்னர் தான் மகளை இழந்து வாடுவதாகவும், நமது பெரியநாச்சியை மகளாக பாவிப்பாதால், பெரியநாச்சியை அரண்மனையிலேயே தங்குமாறும் சொன்னார். அதற்கு, பெரியநாச்சி மற்றும் வீரிய பெருமாள், மன்னரிடம் தாங்கள் தேவைப்படும் போது, தகவல் தெரிவித்தால் உடன் வருவதாக கூறி விட்டு தங்களது இல்லம் வந்து விட்டனர்.

பின்னர், ஒரு முறை மன்னர் புதுகோட்டை பகுதியில் வேட்டைக்காக சென்று காட்டுப் பன்றியை வேட்டையாடி, திரும்பும் போது, தனது மகளைப் போன்று பாவிக்கும் பெரியநாச்சிக்கு சிறிது பன்றிக் கறியை கொடுத்து வருமாறு சேவகனிடம் சொல்ல, சேவகன் தான் அரண்மனைக்கு திரும்பும் வழியில் வியாபாரம் முடித்து திரும்பும் நமது வீரிய பெருமாளை தற்போதய காந்தி மார்க்கெட்(கமான் ஆர்ச்) பகுதியில் சந்தித்து, மன்னர் பொருள் கொடுக்க சொன்னதாக தகவல் தெரிவிக்க, நமது வீரிய பெருமாள், கொடுக்குமாறு சொல்ல, அச்சேவகன், வீரிய பெருமாளின் எண்ணெய் பானையின் மீது அக்காட்டுப் பன்றியின் கறியை வைத்து விட வீரிய பெருமாளோ என்ன பொருளென தெரியாமல் வீட்டிற்கு வந்துக்  கொண்டிருந்தார்.

அப்போது மரக்கடை பாஸ்போர்ட் அலுவலகம் அருகே வந்த போது அங்குள்ள முனீஸ்வரர்(கோட்டை முனி) அடித்து அவர் அந்த இடத்தில் இறந்து விட்டார். அவருடன் சென்ற நாய், அவரது இரத்தம் தோய்ந்த உடலுடன் வீட்டிற்கு வர, நமது பெரியநாச்சி ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்து, அந்த நாயுடன் சென்று பார்த்து, தனது கணவரின் உடலை மாட்டு வண்டியில் வைத்து உறையூருக்கு எடுத்து வரும்போது,  மாட்டு வண்டி தற்போது பெரியநாச்சி அம்மன் கோவில் கருவரை உள்ள இடத்தை விட்டு நகரவில்லை. அந்த இடத்திலேயே வண்டி சுற்றி கொண்டு இருந்தது. எனவே, வீரிய பெருமாள் சடலத்தை வண்டியில் இருந்து இறக்கி வைத்தனர்.

இந்த சமயத்தில் மன்னர் விசுவப்ப நாயக்கரும் தகவலறிந்து அவ்விடம் வந்து சேர்ந்தார். அவர் பெரியநாச்சியிடம் கணவர் வீரிய பெருமாளை அடக்கம் செய்து(எரித்து) விட்டு அரண்மனைக்கு வருமாறு அழைத்தார். ஆனால், நமது பெரியநாச்சியோ, நமது வாணிய இனக் கொள்கைப் படி, உடன்கட்டை ஏறுவதாக பிடிவாதமாகச் சொல்ல, மன்னரும் மற்றும் உடன் இருந்தவர்களும் பெரியநாச்சி உடன்கட்டை ஏற ஏற்பாடு செய்தனர். மறுநாள் சூரியோதய நேரத்தில் சந்தனக் கட்டை முதலான அனைத்து விதமான உயர் ரக மரங்களை வைத்து சிதை மூட்டி, தனது கணவர் வீரிய பெருமாளை கையிலேந்தி சிதையில் இறங்கி உயிரை மாய்த்துக் கொண்டார்.

பின்னர், நமது பெரியநாச்சி, மன்னரின் கனவில் தோன்றி, தான் சக்தி சொரூபம் அடைந்து விட்டதாகவும், தனது குடிமக்கள் வழிபட கோவில் அமைக்க உதவுமாறும் கூறியதால், மன்னரும் தற்போது கோயில் உள்ள இடத்தை ஒரு பிராமணரிடமிருந்து வாங்கி கொடுத்துள்ளதாக தகவல் உள்ளது. (அரசக் கட்டளையை மீற முடியாத அப்பிராமணர் இந்த இடத்தை சர்ப்ப பூமியாக கடவது என சாபமிட்டுள்ளதாகவும் தகவல் உள்ளது)

வீரப்ப சுவாமி :
நமது பெரியநாச்சி சிதை மூட்டியிறங்கும்போது, தனக்கு வாரிசு இல்லையென வருத்தப் பட்டு வடக்கு நோக்கி தனது கணவரின் இஷ்ட தெய்வமான பெருமாளை கூப்பிட, பெருமாள் மலையிலிருந்து வீரப்ப சுவாமி வாரிசாக வந்ததாக தகவல் உள்ளது (பெருமாள் மலை பிச்சாயியின் கணவர்). எனவே, ஸ்ரீ் வீரப்ப சுவாமி நமது ஸ்ரீ் பெரியநாச்சி அம்மன் கோவிலில் ஆதிக்கம் செலுத்துவதாக தகவல் உள்ளது (முன்னோடும் பிள்ளை).

 


இந்த கோவில்  5 கோத்திரம் குடி மக்களுக்கு சொந்தம் ஆகும்.
1. பருத்திகுடையான் மகரிஷி கோத்திரம்.
2. தென்னவராயன் மகரிஷி கோத்திரம்.
3. பயிராளலக மகரிஷி கோத்திரம்.
4. பாக்குடையான் மகரிஷி கோத்திரம்.
5. மாத்துடையான் மகரிஷி கோத்திரம்.


இந்த கோவிலில் 5 கோத்திர மக்களும் தங்களின் குழந்தைகளுக்கு முதல் முடியை இங்கு காணிக்கையாக ஆடி 18 மற்றும் மஹாசிவராத்திரி தினமன்று மட்டும் செலுத்துகின்றனர். ( வருடத்தில் 2 முறை மட்டும் ).

வருட பூஜையாக ஆடி 18(ஆடி பெருக்கு) மற்றும் மஹாசிவராத்திரி தினமன்று தங்கள் குல மக்களுக்காக சிறப்பு பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த கோவிலில் 33 தெய்வங்கள் உள்ளது.
இதன் விவரங்களை திருத்தலம்-ல் பார்க்கவும்