துதி - விருத்தம்

கருட பத்து

ஓம் பூரணனே பதிணாறு திங்கள் சேரும் பொருந்தியே யருக்கன்பதி னெட்டுஞ் சேரும்
காரணனே கருமுகில் பொன் மேனி சேரும் கருணை பெரு மஷ்டாட்சரங் கலந்துவாழும்,
வாரணனே லட்சுமியோ டெட்டுஞ் சேரும் மதிமுகம் போல் நின்றிலங்கு மாயாநேயா,
ஆரணனே ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!                         1

வந்திரமோ அஷ்டசித்து மெட்டுஞ் சேரும் வாழ்கிரக மொன்பது வந்துசேரும்,
கந்திருவர் கணநாத ராசி வர்க்கம் கலைக்கியான நான் வேதங்கலந்து வாழும்
நந்தி முதல் தேவர்களுங் கவன யோகம் நமஸ்கரித்துன் பாதம் நாளும் போற்ற
அந்தரமாய் நிறைந்திருக்குங் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!         2

மூலமுதலோ ரெழுத்து நீர்தானாகும் மூன்றெழுத்து மைந்தெழுத்து மொழியலாமோ,
சீலமுதல் ஓம்-அங்-உங்-மங்-றிங் கென்றே சிவனுடைய திருநாமம் நீர்தானாகும்
காலமுதல் ஓம்-அங்-உங்-மங்-றிங் கென்றே கருணை பெரு மிவ்வெழுத்து நீர்தானாகும்
ஆலவிஷங்கையேந்துங் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!               3

நவ்வென்றும் கிலியென்றும் ஓம்சிவாயமென்றும் நமநம சிவசிவ ராரா வென்றும்
சவ்வென்றும் ஓங்கார ரீங்கார மாகித் தவமுடைய விவ்வெழுத்தும் நீர்தானாகும்
ஓவ்வென்று ஓம் நமோ நாராயணா வென்று உன்பாத முச்சரித்துகந்து போற்ற
அவ்வென்று ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!                     4

உதிக்கின்ற சிவசொரூபமுனக்கே யாகும் ஓம்-அவ்வும்-உவ்வுங்கிலியும் மென்றே
பதிக்கிசைந்த ஐந்தெழுத்தை வெளியில் விட்டே பச்சை முகில் மேனியனே பணிந்தேனுன்னை
விதிக்கிசைந்த மெய்பொருளே அரிகோவிந்தா விளக்கொளிபோல் மெய்த்தவமே
                                                   விரும்பித் தாதா
அதற்கிசைந்த நடம்புரியுங் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!              5

வேதமுதலாயிருந்த சிங்க ரூபம் விளங்குகின்ற விரணியனை வதையே செய்தாய்
பூதமுதலாம் பிறவும் புண்ணிய நேயா புகழ்ந்தவர்க்குத் துணைவருவா யசோதை புத்ரா
நாதமுதல் விந்துவாயுயிருக் கெல்லாம் நயம் பெறவே நிறைந்திருக்கும் வரத பிர்ம
யாதவன் போல் நிறைந்திருக்கும் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!    6

முக்கோணம் நாற்கோண மொழிந்தைங் கோண முச்சுடரே யறுகோண மெண்கோணமாகும்
சட்கோண நாற்பத்து முன்று கோணம் தந்திரமுஞ் சிதம்பரமுஞ் சகல சித்தும்
இக்கோண மிதுமுதலா வதார மட்டும் இறைய வனாய்த் தானிருந்து ரட்டித்தாலும்
அக்கோண மீதிருந்து கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!              7

பச்சைமுகில் மேனியனே யுனக்கே யிந்தப் பார்தனிலே பத்தவ தார முண்டு
மச்சமென்றும் கூர்மமென்றும் வராகமென்றும்  வாமனென்றும் ராமனென்றும்
                                                   பவுத்தனென்றும்
துஷ்டரை யடக்க மோகினி வேடங் கொண்டாய் தோன்றினா யுன்சொரூப மெல்லாம்
                                                   அறிவாருண்டோ
அச்சந்தீர்த்தெனையாளக் கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!          8

வேதியனாய் தோன்றி வந்தாய் மாபலிக்கு விண்ணவர்க்காய் நரசிங்க ரூபமானாய்
சாதியிலே யாதவனாய்க் கிருஷ்ணனாகத் தானுதித்து வந்திருந்தாய் தரணி வாழ்க
சோதனைகள் பார்த்திடுவோர் துதிப்போர் தம்மைத் துஷ்டரையும் வதை செய்து
                                                   லோகமாள்வாய்
ஆதிமுதலோரெழுத்தே நீ கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!         9

மாயாவனே ரகுராமா அருகே வாவா வஞ்சனைகள் பறந்தோடநெஞ்சில் வாவா
காயாம் பூ நிறமுடனே கனவில் வாவா கருமுகில் மேனியனே என் கருத்தில் வாவா
நாயகனே யென்னாவி லிருக்க வாவா நாள்தோறு முன்பாதந் துதிக்க வாவா
ஆயர்குலத்துதித்தவனே கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!         10

முப்புரத்தை யெரித்தவனே யிப்போ வாவா முகில் நிறனே ஜகநாதா முன்னே வாவா
எப்பொழுதுந்துதிப்பவர் பங்கில் வாவா ஏழைப்பங்கிலிருப்பவனே யிறங்கி வாவா
ஒப்பிலா மணிவிளக்கே யொளிபோல் வாவா ஓம் நமோ நாராயணாவுகந்து வாவா
அப்பனே ரகுராமா கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!                    11

துளபமணி மார்பழகா சுகத்தைத் தாதா சுருதியே மெய்ப்பொருளே வரத்தைத் தாதா
களபகஸ்தூரியனே கடாட்சந் தாதா, கஞ்சனைமுன் வென்றவனே கருணை தாதா
பழம்பொருளே சிவஜோதி பாக்கியந் தாதா பத்திமுத்தி சித்திசெய்யவுன்பாதந் தாதா
அளவிலா மெய்பொருளே கெருடன் மீதில் அன்புடனே யேறிவந் தருள் செய்வாயே!       12

 

திருப்பல்லாண்டு

(பெரியாழ்வர் அருளிய திருப்பல்லாண்டு)

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
    பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
    சேவடி செவ்வி திருக்காப்பு                   1

அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி
    ஆயிரம் பல்லாண்டு;
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற
    மங்கையும் பல்லாண்டு;
வடிவார்சோதி வலத்துறையும் சுடர்
    ஆழியும் பல்லாண்டு;
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச
    சன்னியமும் பல்லாண்டே                    2

வாழாட் பட்டு நின்றீருள்ளீரேல் வந்து
    மண்ணும் மணமும் கொண்மின்;
கூழாட்பட்டு நின்றீர்ககளை எங்கள்
    குழுவினில் புகுத லொட்டோம்;
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள்
    இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப்
    பல்லாண்டு கூறுதுமே.                    3

ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து
    எங்கள் குழாம் புகுந்து
கூடு மனமுடையீர்கள்! வரம் பொழி
    வந்து ஒல்லைக் கூடுமினோ;
நாடும் நகரமும் நன்கறிய நமோ
    நாராயணாய வென்று
பாடுமனமுடைப் பத்தருள்ளீர்! வந்து
    பல்லாண்டு கூறுமினே.                    4

அண்டக் குலத்துக் கதிபதியாகி
    அசுரர் இராக்கதரை
இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த
    இருடீ கேசன் தனக்குத்
தொண்டக் குலத்தில் உள்ளீர்! வந்தடி தொழுது
    ஆயிர நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்
    லாயிரத் தாண்டு என்மினே.                    5

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்
    ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்; திரு
    வோணத் திருவிழாவில்
அந்தியம் போதில் அரியுரு வாகி
    அரியை அழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்
    தாண்டென்று பாடுதுமே.                    6

தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி
    திகழ் திருச் சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று
    குடிகுடி ஆட் செய்கின்றோம்.
மாயப் பொருபடை வாணனை ஆயிரந்
    தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்கு
    பல்லாண்டு கூறுதுமே.                    7

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும்
    அத்தாணிச் சேவகமும்
கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு
    காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்தென்னை
    வெள்ளுயிர் ஆக்கவல்ல
பையுடை நாகப் ப்பகைக் கொடியானுக்குப்
    பல்லாண்டு கூறுவனே.                    8

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை
    யுடுத்துக் கலத்த துண்டு
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன
    சூடுமித் தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திரு
    வோணத் திருவிழாவில்
படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப்
    பல்லாண்டு கூறுதுமே.                    9

எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடி
    யோமென்று எழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குழல்
    வீடு பெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமதுரை யுள்
    சிலை குனிடத்து ஐந்தலைய
பைந்நாகத் தலை பாய்ந்தவனே! உன்னைப்
    பல்லாண்டு கூறுதுமே.                    10