ஸ்ரீ் பச்சநாச்சியம்மன் கோவில் வீடு, புலியூர், திருச்சி

(திருச்சி தென்னூர் ஸ்ரீ் பெரிய நாச்சியம்மன் கோவிலுக்குட்பட்ட தென்னவராயன் மகரிஷி கோத்திரத்தினரின் ஒரு பிரிவினர் வழிபடும் கோவில் வீடு)

ஸ்ரீ் பெரிய நாச்சியம்மன் & வீரிய பெருமாள் துணை
ஸ்ரீ் பச்சநாச்சி அம்மனை எடுத்து வழிபடும் ஆரம்ப காலத்தில் அக்குடும்பத்தில் ஐந்து பேர்களே இருந்தனர், அந்த ஐவரில் ஒருவருக்கு வாரிசு இல்லாமல் போய்விட்டது, மீதம் உள்ள நால்வரின் வரி வரியாக உள்ள குடும்பமே ஐந்து தலைமுறைக்கு பின்னர் இன்று உள்ள சுமார் 50 குடும்பங்கள். இந்த 50 குடும்பத்தினரும் இன்று தென்னவராய மகரிஷி கோத்திரத்தில் உள்ள ஒரு பிரிவினர் மீதம் உள்ள தென்னவராய மகரிஷி கோத்திரத்தில் உள்ள மக்களுக்கு இக்கோவிலில் எந்த உரிமையும் கிடையாது.

சத்தியம்

தென்னவராய மகரிஷி கோத்திரத்தில் பிறந்த பெண் என்பதாலும், நமது வீட்டில் பிறந்த நமது உடன் பிறப்பு என்பதாலும் பூஜையின் போது இலையை திருப்பி போட்டாலும், எச்சில் கையில் சாதம் படைத்தாலும், ஏற்றுக்கொள்ள வேண்டும் அதை தவறாக நினைக்க கூடாது என்று ( நம் முன்னோர்கள் ) ஸ்ரீ் பச்சநாச்சி அம்மனிடம் சத்தியம் வாங்கியுள்ளதாக சொல்லியிருக்கின்றனர்.


ஆரம்ப காலத்தில் இத்தெய்வத்தை வழிபடும் பொழுது வருடத்திற்க்கு மூன்று முறை - தை மாதம் சங்கராந்தி பொங்கல், மாசி சிவன் ராத்திரி, ஆடி பதினெட்டு ஆகிய நாட்களில் வழிபாடு செய்து வந்துள்ளனர், இடையில் நமது குடும்பத்தில் பிறந்த பெண் மாசி சிவராத்திரி சமயம் ருசுவாகி தீட்டு ஏற்பட்டதால் சிவராத்திரி பூஜை தடைபட்டு போய்விட்டது.

சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்த நங்கவரம் கிராமத்தில் பிராமணர்கள் அதிகம் பேர் வாழ்ந்து உள்ளனர். பிராமணர்களுக்கும், நமது குடி மக்களுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக அக்கிராமத்தை காலி செய்துவிட்டு பிழைப்பதற்காக வெளியேறி விட்டனர். அப்பொழுது திருச்சியில் தெய்வத்தை வைத்து வழிபாடு செய்ததாக கூறுகின்றனர். இதற்கு சான்றுகள் இல்லை.

அதன்பிறகு இத்தெய்வத்தை மேலப்பட்டி என்று இன்று அழைக்கப்படும் செக்காரப்பட்டியில் வைத்து வழிபாடு செய்திருக்கின்றனர்.  வருடங்கள் சென்றன, செக்காரப்பட்டியில் இத்தெய்வத்தை வழிபாடு செய்யும் காலம் அண்ணாவி என்பவர் ஏழு(7)  செக்குகள் போட்டு எண்ணெய் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

குளித்தலை தாலுகா முதலைப்பட்டியை சேர்ந்த மேலப்பட்டி என்று அழைக்கப்படும் செக்காரப்பட்டியில் ஸ்ரீ் பச்சநாச்சி அம்மனை வைத்து வழிபட முடியாததால்,  அங்கிருந்து ஸ்ரீ் மாரியம்மன் எல்லையில் அமைந்துள்ள திருச்சி தாலுகா இனாம்புலியூர் கிராமத்தில் வைத்து வழிபாடு செய்கின்றனர், இன்றும் அந்த இடத்தில் வழிபாடு நடந்து வருகின்றது.

இக்கோவில் கன்னி கழியாத சிறு பெண்களும், ஆடவர் மட்டும் உள்ளே போகலாம், மற்றவர்கள் உள்ளே அனுமதிப்பதில்லை, இது தெய்வத்தின் கட்டளை ஆகும்.

இக்கோவிலுக்கு சாமியாடிகள் யாரும் 1993 ஆம்  ஆண்டு வரை இல்லை, ஆயுதங்கள் கிடையாது, ஸ்ரீ் பச்சநாச்சி அம்மனுக்கு சேலையும் ஸ்ரீ் வீரமலையாண்டி, ஸ்ரீ் அண்ணாவி ஆகியோருக்கு வேஷ்டியும் வைத்தே தீபாராதணை நடந்து வந்துள்ளது.

கோவிலின் அமைப்பு மற்றும் அளவு

இக்கோவில் தென்வடலில் சுமார் 46 அடி நீளமும் கிழமேல் சுமார் 9 அடி அகலமும் கொண்ட கெட்டி மெத்தை கட்டிடம் ஆகும். ஆரம்பத்தில் நமது வம்சத்தினர் குடியிருக்க குடிசை வீடாக இருந்தாலும் நமது தெய்வத்திற்கு கெட்டி மெத்தை கட்டிடம் கட்டி வைத்துள்ளனர்.

நமது முன்னோர்கள் அனைவரும் செக்குகள் போட்டு எண்ணெய் ஆட்டி வியாபரம் செய்து வந்துள்ளனர். ஆகையால் செக்கு ஆட்டும் போது 1 கானம் ஒன்றிற்கு 1 கிண்ணம் ( கொட்டாங்குச்சி ) எண்ணை விதம் சேர்த்து அதையே முதலீடாக கொண்டு வருடத்திற்கு இரு முறை கோவிலில் வட்டிக்கு ஏலம் விட்டு அதிலிருந்து வரும் வருமானத்தை கொண்டே அபிசேகம் நடைபெற்று வந்துள்ளது. அபிசேகத்திற்கு என்று தனிநபர் யாரும் செலவு செய்வதில்லை.

தலைக்கட்டு ஒன்றிற்கு தொகை வசூலித்து அதையும் கோவிலுக்கு சேர்த்து வைத்துள்ளனர்.

சாமி நைவேத்யம்/படையல்

1993 ஆம் ஆண்டு உள்ள குடி மக்களுக்கு தெரிந்த வரையில் ஆரம்பத்தில் பொ. அண்ணாவி செட்டியார் இக்கோவிலுக்கு பட்டயதாரர் ஆக இருந்து வந்திருக்கிறார், அவருடைய காலத்தில் தேங்காய் பழம் வைத்தே தீபாராதனை நடைபெற்று வந்திருக்கிறது, பொ. அண்ணாவி செட்டியார் காலத்தில் அம்மன் எனக்கு பசிக்கிறது ஆகையால் பொங்கல் படையல் இட்டு அபிஷேகம் செய்யுங்கள் என கூறியது.

பொ. அண்ணாவி செட்டியார் மற்றும் குடி மக்களுடன் ஆலோசனை செய்து அதன் பின்னர் சாமி கும்பிடும் நாட்களில் பொங்கல் வைத்து படையல் போட்டு அபிஷேகம் நடைபெற்றது. பொ. அண்ணாவி செட்டியார் மறைவுக்கு பின்னர் சி. துரைசாமி செட்டியார் மேற்படி காரியங்களை செவ்வனே செய்து வந்துள்ளார்.

சி. துரைசாமி செட்டியார் மேற்படி அபிஷேகம்,  பூஜைகளை செய்வதற்கு காரணம் என்னவென்றால் பொ. அண்ணாவி செட்டியார் காலமாகும் பொழுது அவருடைய மகன் பொ.அ. சுப்ரமணியன் செட்டியார் சிறுவனாவன்

சி. துரைசாமி செட்டியார் காலமான பின் மேற்படி பூஜையை சி.து. சின்னசாமி செட்டியார் செய்து வந்துள்ளார், அப்படி பூஜை நடந்து வந்த காலத்தில் பொ.அ. சுப்ரமணியன் செட்டியார் திருமணம் நடைபெற்றது, அதன் பிறகு மேற்படி பூஜைகளை செய்யுமாறு சி.து. சின்னசாமி செட்டியார் அவரிடம் ஒப்படைக்கவே இன்று வரையிலும் பொ.அ. சுப்ரமணியன் செட்டியார் மேற்படி பூஜைகளை செவ்வனே செய்து வந்து கொண்டிருக்கிறார்.

வழிபாடு மற்றும் பூஜை முறை

ஸ்ரீ் பச்சநாச்சி அம்மனை வழிபடும் காலம் ஆதியில் இருந்து இன்று வரையிலும் ஸ்ரீ் பச்சநாச்சிக்கு சேலையும், ஸ்ரீ் வீர மலையாண்டி, ஸ்ரீ் அண்ணாவி ஆகியோருக்கு வேட்டியும் வைத்தே படையல் போட்டு அபிசேகம் நடைபெற்று வருகிறது.

ஸ்ரீ் பச்ச நாச்சி அம்மனும் மற்ற தெய்வங்களுக்கும் உள்ள சேலை வேட்டி கிழிந்தோ அல்லது ஓட்டையாகவோ போனால் நாமாக கடையில் சென்று எடுத்து வந்து வழிபடக்கூடாது, தெய்வம் சேனியனிடம் ( துணி நெய்பவர் ) கனவில் தோன்றி சொல்லி மேற்படி நெசவாளர் ( சேனியன் ) நம் குடிமக்களிடம் கூறி சேலையை நெய்து வந்து படையல் போட்டு உள்ளனர்,

இந்த விபரம் நானகிய சி.து. தங்கராஜூ செட்டியார்க்கு தெரியும், எனது அப்பா சி. துரைசாமி செட்டியாரும், எனது சிறிய தகப்பனார் பொ. அண்ணாவி செட்டியாரும் கூறியிருக்கின்றார்கள்.

எனக்கு விபரம் தெரிந்த வரையில் போதாவூரில் உள்ள சேனியரிடம் கூறி, அவர் வந்து எனது தகப்பனாரிடமும், எனது சிறிய தகப்பனாரிடமும் கூறி இப்போது உள்ள (1992 ஆண்டு) சேலை வாங்கி வைத்து உள்ளனர்.

1993 ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சிகள் :

புலியூர் சி.து. தங்கராசு செட்டியார் தன்னுடைய குடும்ப கேள்விக்காக 1992 நவம்பர் தீபாவளிக்கு முன்பு பூசாரி வைத்து உடுக்கு அடித்து கேள்வி கேட்கும் காலம் நமது குலதெய்வமான ஸ்ரீ் பெரிய நாச்சி அம்மன் மற்றும் வீரப்பன் பரிவாரங்களுடன் வந்து பதில் கூறியது, ஆனால் ஸ்ரீ் பச்ச நாச்சி அம்மன் மந்தைக்கு வரவில்லை எனவே பூசாரியிடம் ஐயா எங்கள் தெய்வம் எல்லாம் வருகிறது ஆனால் இன்னொறு தெய்வம் இருக்கிறது அதையும் அழையுங்கள் என்று கூறினேன்.

அதன் பிறகு பூசாரி மறுபடியும் சாமியழைக்கும் பொழுது நமது வீட்டு தெய்வமான ஸ்ரீ் பச்சநாச்சியம்மன் வந்து நானே பசியோடு இருக்கிறேன் நான் உங்களை எப்படி காப்பாற்றுவது என சொல்லிவிட்டது. அதற்கு மேல் நான் ஒன்றும் கேட்கவில்லை, அதன் பிறகு நமது கோவில் குடிமக்களின் ஆலோசனைக்கு பின் தீபாவளி முடிந்து மறுநாள் நமது பங்காளிகளுடன் இந்த விபரத்தை தெரிவித்து கோவில்களில் துறையூர் பூசாரியை வைத்து உடுக்கு அடித்து சாமி பார்க்கும் நேரம் ஸ்ரீ் பச்ச நாச்சி அம்மன் எனது இடம் ( கோவில்) சுத்தம் இல்லை, நான் கோவிலில் இருந்து வெளியேறி தற்போது புலியூர் ஸ்ரீ் மாரியம்மன் ஆலயத்தில் இருக்கிறேன் என்று கூறியது.

மேலும் கூறியது முதலில் காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து எனது கோவிலை சுத்தம் செய்யுங்கள் நான் பச்சை பூஜைக்கு வருகிறேன், எனக்கு சாமியாடி வாக்கு சொல்வதற்க்கு சாமியாடி பிடித்து கொடுக்கிறேன் என்றும் கூறியது.

30.01.1993 தை மாதம் 17ந் தேதி அன்று இரவு காவிரிக்கு நமது குடிபடையுடன் சென்று தீர்த்தம் எடுத்துக்கொண்டு மறுநாள் தை மாதம் 18, தேதி 31.01.93 ஞாயிற்றுக்கிழமை அன்று கோவில் சுத்தம் செய்து காலை 11 மணிக்கு மேல் குறி வைத்து சாமியாடிகள் தேர்ந்து எடுத்தனர்.

சாமியாடிகள் :

  • ஸ்ரீ் பச்ச நாச்சி அம்மனுக்கு சாமியாடியாக புலியூர் பெ. மருதை செட்டியார் பேரனும், புலியூர் பெ. ம. கணேசன் செட்டியார் இரண்டாவது மகனுமான சந்திரசேகரன் செட்டியார்.
  • ஸ்ரீ் வீரமலையாண்டிக்கு சாமியாடியாக புலியூர் வீரமலை செட்டியார் பேரனும், ஆறுமுகம் செட்டியார் மூத்த மகனுமான் சுப்ரமணியன் செட்டியார்.
  • ஸ்ரீ் அண்ணாவிக்கு சாமியாடியாக புலியூர் வீனி ராஜன் செட்டியார் மகன் அருணாசலம் செட்டியார் பேரனும், சுப்ரமணியன் செட்டியார் இளைய மகனுமான பாலகிருஷ்ணன் ஆகியோர் குறி வைத்து எடுத்தனர்.


முன்னதாக பூசாரி வைத்து சாமியழைத்து கேள்விகள் கேட்கும் நேரத்தில் பட்டகாரராக பொ. அ. சுப்பிரமணியன் செட்டியார் இருக்கிறார், ராஜாக்குடிக்கு ஆள் யார் என்று கேட்கும் போது பூசாரி வாயிலாக கீழப்பட்டி ஆறுமுகம் செட்டியார் குமாரர் தங்கவேல் செட்டியார் நியமனம் செய்யப்பட்டது.

பச்சை போடுவது மற்றும் கோவிலில் இருந்து வெளியே இருக்கும் தெய்வங்களை மீண்டும் கோவிலில் குடியமர்த்த செக்காரப்பட்டி எல்லை தெய்வமான ஸ்ரீ் அய்யனார் கோவிலில் அபிஷேகம் செய்து அங்கு காவல் காக்கும் சொத்தும் ஸ்ரீ் மாரியம்மன் கோவிலில் தங்கி இருக்கும் ஸ்ரீ் பச்ச நாச்சி அம்மனை அழைக்கும் பொருட்டு ஸ்ரீ் மாரியம்மனுக்கு அபிஷேகமும் கருப்பு சாமிக்கு காவலும் கொடுத்து கொண்டு வர வேண்டும் என்று கூறினார், மேலும் லால்குடிக்கும் அருகில் உள்ள பூவாளூர் பின்னவாசலில் ராஜன் என்றும் சின்னவன் என்றும் அழைக்கப்படும் நெசவு நெய்பவரிடம் எனக்கு கோடம்பாக்கம் சேலை வாங்கி வந்து படையல் போடவும் என்று கூறிவிட்டார்.

மறுநாள் சி.து. துரைராஜ் செட்டியார் 1. சி.ந. மாரியப்பன் 2. அ. தங்கவேல் செட்டியார் ராஜாகுடி, ஆகியோர் பூவாளுர் பின்னவாசல் சென்று விசாரிக்கும் போது ராஜா என்பவரிடமும் மற்றும் மேற்படி தொழில் செய்பவரிடமும் கேட்டதில் சாமி ஒன்றும் எங்களிடம் கூறவில்லை என்று கூறினர்.

மீண்டும் மறுநாள் பூசாரி வைத்து பார்க்கும் போது 3 நாள், 3 பொழுது கழித்து போக சொன்னேன் நீங்கள் நேற்று போனது தவறு நாளை நீங்கள் போங்கள் என்று கூறினார்.

இரண்டு நாள் கழித்து முன்னர் சென்ற மூன்று பேருடன் பட்டகாரரும் சேர்ந்து நான்கு பேர் சென்று ராஜா என்பதை விசாரிக்கும் பொழுது நீங்கள் வந்து சென்ற அன்று இரவு தெய்வம் வந்து கூறியதாக கூறி சேலை செய்து கொடுத்தார்.

மாசி மாதம் 29ம் தேதி 12.03.1993 அன்று வெள்ளி கிழமை ஸ்ரீ் மாரியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும் 16ந் தேதி அபிசேகமும் செய்து ஸ்ரீ் கருப்புசாமிக்கு காவலும் கொடுத்துவிட்டு ஸ்ரீ் பச்ச நாச்சி அம்மனை அங்கிருந்து அழைத்து கொண்டு வந்து ஆலயத்தில் அமர்ந்தது. அதன் பின்னர் முதலைப்பட்டியை சேர்ந்த ஸ்ரீ் அய்யனார் ஆலயத்தின் அபிசேகம் செய்து காவல் கொடுத்துவிட்டு அங்கிருந்து மூன்று தெய்வங்களுடன் மேலப்பட்டி என்று செக்காரப்பட்டி வந்து முன்பு இருந்த இடத்தில் அமர்ந்தது.

தற்போது பட்டகாரராக இருக்கும் பொ.அ. சுப்ரமணியன் செட்டியார் பட்டக்காரர் அவர் என்றால் சாமியாடித்தான் தேங்காய் உடைக்க வேண்டும் என்று கூற அவரும் சாமியாடி தேங்காய் உடைத்து தீபாராதனை நடந்தது.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீ் பச்சநாச்சி அம்மன் ஆலயம் மூன்று தெய்வங்களும் குடியமர்ந்தன.

மாசி மாதம் 29ந் தேதி வெள்ளி இரவு ஸ்ரீ் பச்ச நாச்சி அம்மனுக்கு படையல் போட உமது பானையில் பொங்கலும் மற்றும் குடிமக்களுக்கு பிரசாதம் வழங்க பெரிய பொவனியில் பொங்கல் வைக்கப்பட்டது, அன்று இரவு சாமியாடிகட்கு ஆயுதம் வேண்டும் என்பதால் மேலப்பட்டி ஸ்ரீ் பெரியக்காள் ஆலயத்திற்கு ரூ. 5.25 ஐந்தேகால் படி கட்டி ஆயுதம் எடுத்து வரப்பட்டது. ஸ்ரீ் பச்ச நாச்சி அம்மனுக்கு பூப்பந்தலும் ஸ்ரீ் வீரமலையாண்டி, ஸ்ரீ் அண்ணாவி ஆகியோருக்கு கரும்பால் பந்தலும் இட்டு அன்று இரவு அபிசேகம் நடந்து தீபாராதனை முடிந்ததும் சாமியாடிகள் அவர் அவர் ஆயுதங்களை எடுத்துக்கொண்டது ஸ்ரீ் வீரமலையாண்டி அவருடைய ஆயுதமான அருவாள் மீது ஏறி வாக்கு கூறினார்.

ஸ்ரீ் பச்ச நாச்சி அம்மன் தன்னுடைய ஆயுதமான பிரம்பு எடுத்து வந்து வாக்கு கூறினார்.

மறுநாள் ஸ்ரீ் 13.03.93 உதிரிவாய் துடைத்தல் நடைபெற்றது, அப்போது ஸ்ரீ் பச்சநாச்சி அம்மன் மற்றும் ஸ்ரீ் வீரமலையாண்டி, ஸ்ரீ் அண்ணாவி ஆகியோர் முன் வந்து, நான் உங்களுடைய படையலை ஏற்றுக்கொண்டேன் என்று கூறி அன்றைய நிகழ்ச்சி இனிமையாக முடிவு பெற்றது.

1993 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  புலியூர் சி.து. தங்கராசு செட்டியார் வீட்டில் இருந்து சில நகைகள் காணாமல் போய்விட்டது, அதற்க்காக பூசாரி வைத்து சாமி பார்க்கும் பொழுது ஸ்ரீ் பச்ச நாச்சி அம்மன் வந்து இன்னும் 3 நாள் 3 பொழுது ஸ்ரீ் பச்ச நாச்சி அம்மன் உன் நகைகள் உனக்கு வந்து சேரும் என்று கூறினார்கள்.

அன்று இரவு ஸ்ரீ் பச்ச நாச்சி ஆலயத்தில் மேற்படி பூஜை வகை சம்பந்தமாக சாமி கும்பிடும் காலம் என்னுடைய கோரிக்கைகளை நான் பகிரங்கமாகவே சொன்னேன் அப்போது பட்டக்காரர் சாமியாடிகள் மூன்று பேரும் மற்றும் ராஜாக்குடி பொது மக்களும் கூட இருந்தனர். கோரிக்கை
1. நான் ( சி.து. தங்கராஜ் ) ஸ்ரீ் பச்ச நாச்சி அம்மன் இருப்பது உண்மையானால்.
2. நான் ( சி.து. தங்கராஜ் ) ஸ்ரீ் பச்ச நாச்சி அம்மனுக்கு பச்சை போடும்போது முன்நின்று அப்பூஜையை நடத்த வேண்டும் என ஆசைப்பட்டால் பொருள் எனக்கு கிடைக்கட்டும்.
3. அப்படி பொருள் எனக்கு கிடைக்கவில்லை என்றால் பச்சை பூஜை நடக்கும் பொழுது பத்து பேரோடு பதினோராம் ஆளாக இருப்பேன் அன்றி முன் நின்று செய்யமாட்டேன்.

மேற்படி மூன்று கோரிக்கையும் சொல்லிவிட்டு சாமி கும்பிடும் போது சி.து. தங்கராசு ஆகிய நான் ராஜாகுடி தங்கவேல் செட்டியாரிடம் எக்காரணம் கொண்டும் சாமியாடிகள் மீது திருநீரு போட்டு சாமி அழைக்க வேண்டாம் என்று கூறி விட்டேன், தீபாராதனை முடிந்து சாமி கும்பிடும் போது தானாகவே சாமியாடிகள் அருள் வந்து மூன்று தெய்வங்களும் நீ என் கண்ணை திறந்தவன் காணாமல் போன நகைகள் உன்னுடையது அல்ல, அது என் நகை நான் உனக்கு தருகிறேன் என்று கூறினார்கள்.

மூன்றாம் நாள் மாலை 5 மணிக்கு நாச்சிகுறிச்சி ரைஸ்மில்லில் காணாமல் போன பொருள் கிடைத்தது.

அன்று இரவு மீண்டும் சாமி கும்பிடும் பொழுது முன்போலவே தெய்வங்கள் மூன்று பேரும் வந்து பொருள் உனக்கு கிடைத்து விட்டது, எனக்கு நீ என்ன கொடுப்பாய் என்று என்னை கேட்க நானும் நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்று கூறிவிட்டேன.

ஸ்ரீ் பச்ச நாச்சி அம்மன் எனக்கு கரகத்திற்க்கு செம்பும், ஸ்ரீ் வீரமலையாண்டிக்கு அருவாளும், ஸ்ரீ் அண்ணாவிக்கு திட்டுத்தடியும் உன்னுடைய சொந்த செலவில் எடுத்து கொடுக்க வேண்டும் என்று கூறவே நானும் எடுத்து தருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.

ஆடி மாதம் 3ந் தேதி பூஜையின் நிமித்தம் பூசாரி வைத்து மீண்டும் சாமி பார்க்கும் காலம் ஆடி 28க்கு பூஜைக்கு வருகிறேன்  என்று மீண்டும் கூறியது, மத்தியஸ்தர் ஆனார் புலியூர் ஆ. தர்மலிங்கம் செட்டியார் பூஜை போடும் போது சிறு பிள்ளைகள் தெரிந்தும் இருக்கும் தெரியாமலும் இருக்கும் ஆகையால் தவறுகள் ஏதெனும் இருந்தால் நீ தான் மன்னித்து பூஜையை ஏற்றுக்கொள்ள வேண்டும் ஆகையால் ஸ்ரீ் மாரியம்மன் ஆலயத்தில் உத்தரவு வாங்கித்தரவும் என கேள்வி கேட்க உத்தரவு வாங்கி தருகிறேன் என்று பூசாரி கூறிவிட்டார், மீண்டும் கேட்கும் போது எனக்கு ( சி.து. தங்கராசு செட்டியார் ) ஆயுதம் செய்ய சொல்லி இருக்கிறது எங்கே எப்படி செய்வது என்று கேட்கும் காலம் ஸ்ரீ் பச்ச நாச்சி அம்மன் எனக்கு கரகத்திற்க்கு மலைவாசல் அருகே கடைவீதியில் கீழ்புறம் 3வது கடை பிள்ளை கடை ( அருணாசலம் பிள்ளை ) யில் எடுத்துக் கொள்ளவும், ஸ்ரீ் வீரமலையாண்டிக்கும் ஸ்ரீ் அண்ணாவி ஆகியோருக்கும் ச்ங்கிலி வாசலில் உள்ள நபர் அரிவாலும், கிட்டுத்தடியும் அடித்து கொடுப்பார் நீ வீட்டில் இருக்கவும் உன்னை தேடி ஆள் வருவார் நீ வெளியே இதற்காக தேடி அலைய வேண்டாம் என்று கூறிவிட்டார்.

ஆடி மாதம் 4ந் தேதி செவ்வாய் காலை 1 செவ்வாய் மாலை 2 மறுநாள் ஆடி 5ந் தேதி புதன் காலை 3, ஆகிய மூன்று வேளையும் ஸ்ரீ் மாரியம்மன் கோவிலுக்கு நமது குடிபடையுடன் சென்று உத்தரவு கேட்கும் காலம் ஸ்ரீ் மாரியம்மன் கோவிலில் உத்தரவு கிடைக்கவில்லை எனவே ஆடி மாதம் 5ந் தேதி புதன் கிழமை காலை 7 மணி சுமார் ஸ்ரீ் பச்ச நாச்சி அம்மன் கோவில் வாசலில் பூசாரியை வைத்து மீண்டும் சாமியழைத்து கேட்ட பொழுது தெய்வம் கூறியதாவது .

நான் முன்னமே உங்களுக்கு ஆடி 28 பச்சை பூஜைக்கு வருகிறேன் என் கூறினேன் அது தான் உத்தரவு என்று கூறிவிட்டது.

அந்த நேரத்தில் மந்தையில் சொன்னதுதான் உத்தரவு என்றால் உமது பிள்ளைகள் மூலம் இப்போதே சொல்வட்டம் என்று கேட்க நான் கருதுகிறேன் என்று கூறி மந்தையை முடித்துவிட்டோம்.

அதன் பின்னர் சாமியாடிகள் மூவரையும் நிற்க வைத்து கோவிலில் தீபாராதனை முடித்து ராஜாக்குடி காரர் தங்கவேல் செட்டியார் திருநீரு போட்டு சாமியை அழைத்தார்கள்.

ஸ்ரீ் பச்ச நாச்சி அம்மன் மற்றும் ஸ்ரீ் வீரமலையாண்டி, ஸ்ரீ் அண்ணாவி ஆகியோர் அருள் வந்துஆடி பச்சை பூஜை போடவும் நான் உங்களை எல்லாம் காப்பாற்றுகிறேன் இதுவே உத்தரவு என்று கூறிவிட்டனர்.

ஆடி மாதம் 3ந் தேதி காலை 8 மணிக்கு சாமியாடிகள் மூலம் பச்சை பூஜைக்கு உத்தரவு கிடைக்கவும் நமது குடிமக்களுடன் பூஜை போடுவது பற்றி பேசிக் கொண்டு இருக்கும்போது சங்கிலி எல்லையில் ( போசம்பட்டி) உள்ள கொல்லர் என்னிடம் வந்து ஸ்ரீ் வீரமலையாண்டி தெய்வம் அவர் கனவில் வந்து எங்களுடைய ஆயுதம் நான்கு உள்ளது, அதை கொடு என்று கேட்க அதற்கு கொல்லர் நீ யார் என்று கேட்க நான் வீரமலையாண்டி என்று சொல்லி மறைந்து விட்டாராம் என்று கூறினார்.

என்னிடம் தெய்வம் சொல்லியது போல் உன்னை தேடி வருவார் நீ இதற்காக அலைய வேண்டாம் என்று சொல்லியது போல் என்னைத் தேடி கொல்லர் வந்து விபரம் சொல்லவே அவரிடம் ஸ்ரீ் வீரமலையாண்டி, ஸ்ரீ் அண்ணாவி ஆகியோருக்கு உண்டான அரிவாளும், திட்டுத்தடியும் செய்யச்சொல்லி அச்சாரம் கொடுத்து அனுப்பினேன்.

ஸ்ரீ் பச்ச நாச்சி அம்மன் கேட்டப்படி சி,து. தங்கராசு செட்டியார் ஸ்ரீ் பச்ச நாச்சி அம்மனுக்கு கரகத்திற்கும் ஸ்ரீ் வீரமலையாண்டிக்கு அரிவாள் இரண்டும் ஸ்ரீ் அண்ணாவிக்கு திட்டுத்தடி இரண்டும் மற்றும் பிரம்பும் எனது சொந்த செலவில் 1993 ஆம் ஆண்டு எடுத்து கொடுத்து உள்ளேன.

(பின் குறிப்பு ) :

ஸ்ரீ் பச்ச நாச்சி அம்மன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ் பச்ச நாச்சியம்மன், ஸ்ரீ் வீரமலையாண்டி மற்றும் ஸ்ரீ் அண்ணாவி ஆகியோரது வரலாறு நமது குடிமக்களும் மற்றும் உள்ளவர்களும் இன்னும் வரப்போகும் நமது சந்ததியினரும் தெரிந்து கொள்ளும் நோக்கோடு புலியூர் சி.து. தங்கராசு செட்டியார் ஆகிய நான் எழுதும்பொழுது என்னையும் மீறி நான்தானா எழுதியது என்று நானே வியக்கும் அளவிற்கு ஏதோ ஓர் உந்துதல் காரணமாக இவ்வரலாறு எழுதி இருக்கிறேன். இக்கோவிலின் வரலாறு தெரிந்த மூத்த பெரியோர்கள் யாரும் இன்று இல்லை, பூசாரியின் கேள்வி நேரத்தில் கூறிய வரலாறும் எனது அப்பா சி, துரைசாமி செட்டியாரும் எனது சிறிய தகப்பனாரும் பொ. அண்ணாவி செட்டியார் அவர்களும் சொல்ல கேட்டிருந்த தொகுப்பே இவ்வரலாறு ஆகும், இதில் ஏதெனும் தவறுகள் இருப்பினும் அத்தவறை பொருட்படுத்தாது அருள் கூர்ந்து மன்னிக்கவும். ஸ்ரீ் முக வருடம் ஆடி மாதம் 28ந் தேதி 12.08.93 அன்று ஸ்ரீ் பச்ச நாச்சி அம்மன் குடிமக்களும் மற்றும் பந்துக்களுடன் பச்சை பூஜை விழா வெகு சிறப்பாக ஸ்ரீ் பச்ச நாச்சி அம்மனை வேண்டுகிறோம்.

நன்றி. மங்களம் உண்டாகட்டும்

ஸ்ரீ் பச்சநாச்சி அம்மன் போற்றி

தென்னவராயர் குலமே போற்றி
வந்துதித்த தீபமே போற்றி
செட்டிமகள் சுந்தரியே போற்றி
பச்சநாச்சி தெய்வமே போற்றி
நெய்விளக்கே நீயே போற்றி
நினைவுகள் உனதே போற்றி
புலியூர் அரசியே போற்றி
புகழ்பரப்பும்  தெய்வமே போற்றி
வீரமலையாண்டி துணையே போற்றி
அண்ணாவி தமக்கையே போற்றி
எங்களையரசாலும் தீபமே போற்றி
உறவுகள் முறையே போற்றி
உணர்வுகள் நீயே போற்றி
உறக்கம் நீக்கவே போற்றி
அரண்மனை கிளியே போற்றி
அச்சம் தவிர்ப்பவளே போற்றி
அன்பை மறவா போற்றி
அனைத்தும் நீயே போற்றி
கரும்பாலே தோரணம் போற்றி
கற்புக் கரசியே  போற்றி
கல்வி தரவேண்டும் போற்றி
உறவை காப்பவளே போற்றி
உத்தம தெய்வமே போற்றி
சந்நதியில் தவழும் அழகே போற்றி
சாம்புராணி வாசகியே போற்றி
சடுதியில் வரும் தெய்வமே போற்றி
போற்றி போற்றி போற்றி
பச்சநாச்சி தெய்வமே போற்றி

ஸ்ரீ் பச்சநாச்சி அம்மன் துதி

பெற்றெடுத்த பொன்மணியே
பச்சநாச்சி கண்மணியே
இச்சையுடன் அழைக்கின்றோம்
எங்கள் முன்னே வாருமம்மா
இரு கைகளால் கொடுத்த பூமாலை
இதயத்தினால் தொடுத்த பூமாலை
அருள் பொங்கும் தீபங்கள் ஏற்பாயம்மா
அடியேனை எந்நாளும் காப்பாயம்மா
முன்னோர்கள் எழுதி வைத்த
முன்குறிப்பு தெரியவில்லை
பின்னவர்கள் கூடுகின்றோம்
அன்னை பச்சநாச்சி முன் நிற்பாய்
வீரமலை துணை கொண்டு
வீதி வளம் வந்தாய்
அண்ணாவி தம்பியோடு
ஆனந்தமாய் ஆடி வந்தாய்
தாய் வீடு வந்து போன் உன்னை
தண்ணீரில் கண்டேனம்மா
கண்ணீரில் வாடுகின்றோம்
கருணையுடன் வாருமம்மா
கரும்பாலே பந்தல் போட்டு
பூவாலே தோரணம் கட்டி வைத்தோம் தாயே
மலராலே மணம் வீசும்
மலர் விழியே வருமம்மா
அம்மா எங்கள் இல்லத்திற்கு அடியெடுத்துவா
அழகான வெண்கொற்றைக் குடை பிடித்து வா
சும்மா நீ வரலாமோ?
எங்கள் பகைவரை முறியடித்து வா
துயருறும் யாவருக்கும்
விடை கொடுத்து வா
நெய்யாலே உன் விளக்கு
நீண்ட நாள் எரியுதம்மா
மெய்யாகவே உனை நினைத்து
எங்கள் உள்ளம் நடுங்குதம்மா
தாயே பச்சநாச்சி எங்களை
தயவுடன் காருமம்மா
தாய் வீட்டு சீதனத்தை
தயவுடன் பெருவாயே
பச்சை வைத்து உனை அழைத்தோம்
பச்சநாச்சி தெய்வமே
பச்சப் பிள்ளைச் செய்யும் பிழைபொருத்து
பச்சநாச்சி நீ காத்திடுவாய்
எல்லோர் குடும்பங்களும் எழில் கொண்டு
சிறப்புடன் வாழ
வழி வகுத்து நீ காத்திடுவாய்
தென்னவராய மகரிஷி கோத்திரம் தனில்
வந்துதித்த தெய்வ பசுங்கிளியே
எங்களனைவரையும் அன்புடன் காருமம்மா

தகவல் : 1993 பச்சை பூஜை விழா மலர்
வெளியீடு : A.V. ஆறுமுகம் & பிரதர்ஸ், குட்ஷெட், திருச்சி

Sri Pachanachi Amman Temple, Inampuliyur, 639103
(Related to Sri Periyanachi Amman Temple, Thennur, Trichy)

இருப்பிடம்

இனாம்புலியூர்
திருச்சி

விழாக்கால நேரங்கள்

  • தை மாதம் சங்கராந்தி பொங்கல்
  • ஆடி பதினெட்டு

வழித் தடங்கள்

திருச்சி-குளித்தலை வழியாக 48கி.மீ
கருர்-லாலாபேட்டை வழியாக 45 கி.மீபஸ் ரூட் : குளித்தலை-பஞ்சப்பட்டி வழி வயலூர் டவுன் பஸ்
காலை : 5.00, 6.50, 8.40, 10.40
மாலை : 2.00, 3.30, 6.15, 7.30
குளித்தலை பஸ் நிலையம்

மினிபஸ் (A.P.S, P.K.S) : 6.30, 7.30, 9.15, 12.00, 2.00, 3.00, 5.00, 7.15, 9.15

தகவல், தொடர்புக்கு

சி.து. தங்கராசு செட்டியார்
(த/பெ. சி. துரைசாமி செட்டியார்)
இனாம்புலியூர், திருச்சி
திருமுருகன் ரைஸ் மில்
நாச்சிகுறிச்சி
Cell : 98428-68966

சுப்ரமணியன் செட்டியார், புலியூர்
மந்திரி குடி
Cell : 99444-46751